வவுனியா மாநகர சபைக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாநகரசபையின் சுயேட்சை உறுப்பினர் எஸ்.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதிகார துஸ்பிரயோகங்கள்
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையானது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டிருந்தது. அந்த உயரிய சபையில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஜனநாயக தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஆட்சி அமைத்திருந்தன.

குறித்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு செயற்பாடுகளில் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண ஆளுரால் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்று பல்வேறு முறைகேடுகளும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கையூட்டல்களும் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அரச நிதி முறைகேடும் இடம்பெற்றுள்ளது.
அரச நிதி முறைகேடு
குறித்த விசாரணை அறிக்கையை அடிப்டையாக கொண்டும் கையூட்டல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மக்களது வரிப்பணத்தை மக்களுக்கே வழங்கும் நோக்கிலும், ஊழல் மோசடியை தடுக்கும் வகையிலும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் முதல்வருக்கு எதிராக என்னால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அரச நிதி முறைகேடு தொடர்பில் குற்றத் தடுப்பு பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து விரைவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு தொடர்பிலும், அவர்களது பதவிகளை வறிதாக்க கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதுடன் மேன் முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சபை நடைவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.