வவுனியா மணிபுரம் அன்னை திரேசா வீதி ஒரு வார காலமாக முடக்கம்: மாற்று வழியின்றி மக்கள் அவதி(Photos)
வவுனியா - மணிபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட அன்னை திரேசா வீதியின் அபிவிருத்தி பணிகள் கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் வேறு பாதையின்றி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியா தெற்கு பிரதேச சபையின் கீழ் குறித்த வீதி கல்லிட்டு தாரிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுப்பாதை எவையும் ஏற்படுத்திக் கொடுக்காது, வீதியின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்து செல்லப்படுகின்றமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வீதியின் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குக் கற்கள் பரவப்பட்டுள்ளதுடன், குறித்த கற்கள் வீதியின் கரையிலும் சிதறி காணப்படுவதனால் அப்பாதையூடாக மக்கள் நடந்து செல்வது கூட முடியாதுள்ளதுடன், ஒரு வார காலமாக மந்த கதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுவதினால் தமது வாகனங்களைக் கூட குறித்த வீதியூடாக எடுத்துச்செல்ல முடியாமையினால் வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை அப்பகுதி மக்களுக்கு உருவாகியுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மக்கள் வீதியின்
ஓரமாக நடைபாதையில் நடந்து செல்வதற்காவது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.








