வவுனியா - தனியார் மருத்துவமனையொன்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான போதை மாத்திரைகள்
வவுனியாவில் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நிலக்சன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பிரீஸ், வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகளான பிரசன்னா மற்றும் அரங்கன் உணவு மருந்து பரிசோதகர், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியோர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தவறான முறையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளமை உறுதி
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஓர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அங்கு குறித்த (போதையினை ஏற்படுத்தக்கூடிய) மருந்துகள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தவறான முறையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வைத்திய நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
போதை ஏற்படுத்தும் மருந்து கொள்வனவு
மேலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் ஓர் தனியார் மருந்தகத்தில் ஜனவரி 2022 இலிருந்து ஐப்பசி 2022 வரையான காலப்பகுதியில் 1220 பெட்டி போதையினை ஏற்படுத்தக் கூடிய மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஒர் பெட்டியில் 35 மருந்துகள் வீதம் 1220X35=42700 மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
மருந்து கொள்வனவுக்குரிய பற்றுச்சீட்டுக்கான காசோலையினை குறித்த தனியார் மருந்தகத்தின் இயக்குனரான அரச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் அவரது கையொப்பத்துடன் வழங்கியுள்ளமையும் விசாரணையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த 42,700 மருந்துகள் எங்கு சட்டரீதியற்ற முறையில் விநியோகப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை.
பாரிய குற்றம்
இவ்விடயம் தொடர்பாக திணைக்களத்தினால் பூர்வாங்க விசாரணைகள் செய்யப்படல் வேண்டும்.
மேலும் இது ஓர் பாரிய குற்றம் என்பதுடன் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை செய்யப்பட வேண்டும் என அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்குழுவினால் கையொப்பம் இடப்பட்டு அறிக்கைகள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாக வவுனியாவில் போதை மருந்துகள் விற்பனை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்தகங்களின் பெயர் மற்றும் இதனுடன் தொடர்புடைய நபரின் பெயர் என்பன மறைக்கப்பட்டுள்ளன)