காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு (Video)
13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஆயுதப் போரின் இறுதி நாட்களில் சரணடைந்த நிலையில், காணாமல் போன விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி தமது முன் முன்னிலைப்படுத்துமாறு, இலங்கையின் நீதிமன்றம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தனது கணவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறி தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் செல்லையா விஸ்வநாதனின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தபோதே, வவுனியா மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2009 மே 18ஆம் திகதி முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்திடம் தமது கணவர், 30 வயதில் சரணடைந்ததாக மனுவில் விஸ்வநாதனின் மனைவி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர்; அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரின் மனைவி, தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே விஸ்வநாதனை மார்ச் 22ஆம் திகதியன்று நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துமாறு இராணுவத்துக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனோரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனோர் வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் இன்று (16.12.2022) இடம்பெற்ற நிலையில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில் அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களி்டம் மேலும் தெரிவித்ததாவது,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
“போர் முடிந்த இறுதி கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அதாவது இலங்கை
இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய வழக்குகள் பல
விசாரணைக்கு வந்திருந்தன.
அவற்றில் முதல் ஐந்து வழக்குகளின் தீர்ப்பு இன்று வவுனியா நீதிமன்றத்தில் விடப்பட்டன. இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று அதன் பின்னர் நீதவானின் அறிக்கையின் பிரகாரம் மேல்நீதிமன்றத்திற்கு வந்தது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விளக்கத்தில் எல்லா மனுதாரர்களும் தமது சாட்சியத்தையளித்து பின்னர் இராணுவம் சார்பாகவும் சாட்சியம் அளிக்கப்பட்டது.
அந்த இராணுவ அதிகாரி சாட்சியம் அளிக்கும் போது சரணடைந்தவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக கூறியிருந்தார். எனினும் அந்த பட்டியலை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பின்னர் இந்த வழக்கு மேல்நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு இன்று முதலாவது வழக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் மனுதாரர் அவர்கள் தன்னுடைய கணவர் தனது கண்முன்னாலே தாங்களே சரணடைய வைத்து முகாமில் செய்த அறிவித்தலின் பிரகாரம் அதாவது சரணடைந்தவர்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தன்னுடைய கணவரை சரணடைய செய்து அதன் பின் தன்னுடைய கணவர் பல இ.போ.ச பேருந்துகள் மூலம் அவரும் அந்த பேருந்தில் அடைக்கப்பட்டு இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டார் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
விரைவில் தீர்ப்பு
எனவே இறுதியாக அந்த மனுதாரரின் கணவர் அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்தின் மத்தியில் தான் இருந்தார் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தார் என்பதை மன்று ஏற்றுக்கொண்டது.
அதே சமயத்தில் அதனை எதிர்த்த இராணுவ தரப்பினர் அது தொடர்பான திருப்திகரமான பதிலையும் முன்வைக்கவில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்தது.
அதாவது அதை எண்பிக்கும் பொறுப்பு காணாமல் ஆக்கப்பட்ட நபர் இராணுவத்திடம் சரணடையவில்லை என்ற அதனை நிரூபிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் இருந்தது. ஆனால் பொறுப்பை அவர்கள் சரிவர தங்களுடைய சாட்சியங்கள் மூலம் எண்விக்கவில்லை என்று நீதிமன்றம் கருதியது.
எனவே மனுதாரரின் வேண்டுகோளின் பிரகாரம் ஆட்கொணர்வு மனுவினுடைய எழுத்தாணையை நீதிமன்றம் அனுமதித்து அடுத்த தவணையான 22.03.2023 அன்று காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று நீதிமன்று உத்தரவிட்டது.
அதே சமயத்தில் இன்னுமொரு வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை நீதிமன்றின் முன்னால் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது.
அடுத்த மூன்று வழக்குகளும் வருகின்ற வருடம் ஜனவரி 27 ஆம் திகதி நீதிமன்றத்தில்
அழைக்கப்பட்டு அதன் தீர்ப்பு வழங்கப்படும்” என தெரிவித்தார்.