தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அபாய கட்டத்தில் வவுனியா
கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் வவுனியா மாவட்டம் அபாயமான கட்டத்தில் இருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் உருவான கொரோனா கொத்தணி 61 பேராக உயர்ந்துள்ளது.
அவர்களில் வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் 54 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா நகரின் பசார்வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதி, ஆகியன முடக்கப்பட்டுத் தொற்று உறுதியானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளை குறித்த வீதிகள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனேகமான பொதுமக்கள் தமது அன்றாடத் தேவைகளிற்காகத் தினமும் வந்துசெல்லும் பகுதியாக விளங்குகின்றது.
ஆடையகம், அடைவு கடை, நிதி நிறுவனங்கள், மரக்கறி விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு கடைத்தொகுதிகளை கொண்டமைந்துள்ளதாக இந்த வீதிகள் காணப்படுகின்றது.
இதேவேளை நேற்று மதியம் 1 மணியளவில் 54 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படும் வரை குறித்த வியாபார நிலையங்கள் மற்றும் ஆடையகங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது தேவைகளிற்காக வந்து சென்றுள்ளனர்.
எனவே தற்போது 55 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள அனேகமான பொதுமக்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகி இருப்பதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று முன்தினம் பி.சி.ஆர் மாதிரிகள் எடுக்கப்பட்ட 204 பேரில் தொற்று உறுதி செய்யப்பட்ட பலர் வேறு பகுதிகளில் சென்று தங்கியுள்ளமையால் அதன் மூலமும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.