வவுனியாவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தயிர் பறிமுதல்
முல்லைத்தீவிலிருந்து விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட, உரிய உற்பத்தி இலக்கம் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் இன்றிப் பேணப்பட்ட தயிர்கள் வவுனியாவில் கைப்பற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவிலிருந்து மாட்டுத் தீவனத்துடன் சேர்த்து விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட குறித்த தயிர்கள், வவுனியா மாநகரசபைக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் வைத்து மாநகரசபை சுகாதார பரிசோதகர் ரி. ஜே. ஜெயசிங்க தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
இதன்போது 113 எண்ணிக்கையிலான 250 மில்லி லீற்றர் தயிர்களும், 10 எண்ணிக்கையிலான 500 மில்லி லீற்றர் தயிர்களும் மீட்கப்பட்டதுடன், அதனை கொண்டு சென்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களுக்கு 60,000 ரூபா தண்டம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட மேற்படி பொருட்களை முழுமையாக அழிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


