சேதமடைந்துள்ள பாலம்: ஆபத்தான நிலையில் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்(Photos)
முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
தற்போது பாலத்தின் மையப்பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது.
பாதுகாப்பு அற்ற வீதி
இந்நிலையில், ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது.
பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
தற்போது மழையுடன் கூடிய காலமாகையால் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவி செல்வதோடு, கனரக வாகனங்களும் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பல விபத்துகள் குறித்த பகுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாகவும், குறித்த பாலத்தினை சீரமைத்து தரும்படியும் அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து கொல்லும் பெரும்பான்மையினத்தவர்: சாணக்கியன் குற்றச்சாட்டு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












