நடுக்கடலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து! ராஜபக்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - சஜித்
பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து இருக்கும் போது ராஜபக்சர்களும் அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் சென்று கடலில் விருந்து கொண்டாட்டம் நடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(11) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன, வற் வரி விதிப்பால் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் அல்லல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான சமயத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியாகொவுல்லா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடலில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதற்கு துறைமுக அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார்.
நாடு வங்குரோத்தாகி கிடக்கும் இவ்வேளையில் மதுபானம், துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு குடிபான வகைகளை கூட பெற்றுக் கொண்டு, நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு எரிபொருளை விரயம் செய்வதும், நடுக்கடலில் விருந்து நடத்தி கொண்டாட்டம் நடத்த, கும்மாளமடிக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம்.
அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல என்றாலும், அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விருந்துக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதாகவும், இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |