ஆய்வு செய்யாமல் அதிகரிக்கப்பட்ட வற் வரி : நடுக்கடலில் விருந்துபசாரம்
வரிகளை அதிகரிக்க முன்னர் ஆய்வுகளை செய்தே அதனை செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இதனை புரியாது நடுக்கடலில் விருந்துபசார நிகழ்வுகளை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இதனால் மக்களின் இரண்டாவது சுற்று அடிகளை வாங்கவும் போகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் பாதிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் வற் அதிகரிப்பின் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நாளாந்தம் உணவுக்காக கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 மில்லியன் மக்களில் 11 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களோ மக்களின் பிரச்சினைகள் எதுவும் தெரியாததைபோன்று இருக்கின்றனர்.
ஆனால் வற் வரி மக்களுக்கு தெரியவில்லை என்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார். வெளியில் சென்று பார்த்தால் அவருக்கு நடப்பது என்ன என்று தெரியும்.
அதிகரிக்கப்பட்ட வரி
வரிகளை அதிகரிக்க முன்னர் ஆய்வுகளை செய்தே அதனை செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இதனை புரியாது நடுக்கடலில் விருந்துபசார நிகழ்வுகளை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இதனால் மக்களின் இரண்டாவது சுற்று அடிகளை வாங்கவும் போகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சியினர் திட்டமிடுகின்றனர். அவ்வாறு செய்துகொண்டே ஒன்லைன் சட்டமூலத்தையும் கொண்டுவருகின்றனர். பிரதமராக இருந்த போது முழு நாட்டுக்கும் வைபை வழங்குவதாக கூறியவர் இப்போது வேறுவகையில் கதைக்கிறார்.
எனவே இன்று மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இளைஞர்கள் இணையத்தளங்கள் ஊடாக அணி திரளவுள்ளனர். இதனை தடுப்பதற்கே ஒன்லைன் சட்டமூலத்தை கொண்டு வருகின்றனர். எவ்வாறாயினும் நாங்கள் அச்சமடையப் போவதில்லை.
எதிர்வரும் 30ஆம் திகதி நாங்கள் மக்களை வீதிக்கு இறக்குவோம். வற் வரி அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு, கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம். மீண்டும் மக்களை வீதிக்குள் தள்ளியுள்ளீர்கள்.
மக்களுடன் இணைந்து 30ஆம் திகதி நாங்கள் எமது வேலையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் அரசாங்கத்தை விரட்டியடித்த பின்னரே திரும்பி பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |