இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி : நாடாளுமன்றத்தில் இன்று கிடைக்கவுள்ள அங்கீகாரம்
இலங்கையில் இதுவரையில் வற் வரிக்கு உட்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளை அதன் கீழ் கொண்டுவரும் புதிய வரி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் செய்யப்படவுள்ளது.
இன்று நிறைவேற்றப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டத்திற்கமைய, பெட்ரோல், தொலைபேசி, கணினி, இறக்குமதி செய்யப்படும் பானங்கள், பாண்தூள்கள், குழந்தை பால் உணவுகள் போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
புதிய வற் வரிக்கு உட்படுத்தப்படும் பகுதிகளில் இறுதிச் சடங்குகளும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தகனம் மற்றும் புதைகுழிகள் மீதும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வற் விதிக்கப்படும் பொருட்கள்
இது தவிர, வாகனங்கள், கையடக்கத் தொலைபேசிகள், மருந்துப் பொருட்கள், மருந்துகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், அனைத்து சுகாதார சேவைகள், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், மீன்பிடி தொடர்பான அனைத்து உபகரணங்கள், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் பால், ஆடை தொழில், மின் கட்டணம், கல்விச் சேவைகள், பேருந்து, ரயில் கட்டணம் உள்ளிட்ட பொருள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களும் உயரும்.
புதிய சட்டத்தின் முதன்மை நோக்கம், அனைத்து நிதிச் சேவைகள், அனைத்து மொத்த மற்றும் சில்லறை வணிகங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் என்பன வற் வரிக்கு உட்பட்டது அல்ல.
வற் வரி
விலை மனுக்கோல் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள் உட்பட, 18 சதவீத வற் வரியை விதிக்க வேண்டும்.
இந்த சட்டமூலத்தை இன்று விவாதித்து திருத்தம் செய்த பின்னர், எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வற் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 10,624 ஆகும். அரசாங்கத்தின் வருடாந்த வரி வருவாயில் 21.4% வற் வரி செலுத்துவதன் மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.