சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய அனுமதி
2008ஆம் ஆண்டு 11 இளைஞா்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடா்பில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திரும்பப் பெற்றமைக்கான காரணங்களை சட்டமா அதிபா் சமா்பிக்கவுள்ளாா்.
இந்தக் காரணங்களை விளக்கிய இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியாா் நாயகம், நெரின் புள்ளே, கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை திரும்பப்பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் கொண்டுள்ளதாக தொிவித்தாா்.
எனவே அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார்.
இதற்கு அனுமதி வழங்கிய, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரண்டு நீதியரசா்கள் அடங்கிய அமர்வு, இந்த அறிக்கையை நவம்பர் மாதம் 2ஆம் திகதி நாளையதினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை மீளப்பெறுவதற்கு சட்டமா அதிபரின் தீர்மானத்தை எதிர்த்து, 2008ஆம் ஆண்டு காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்த இடைக்காலத்தடை மனு விசாரணையின்போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
கடற்படையின் முன்னாள் தளபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் நியாயமற்றது, பாரபட்சமானது, சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் இயற்கை நீதி விதிகளுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்டது என மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.
ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் திலான், மொஹமட் சஜித் உள்ளிட்ட 5 பேர் 2008 செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போனதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது காணாமல் போன 11 பேருக்கும் கடற்படையின் முன்னாள் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் படி, பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிலர் கடத்தப்பட்டு, திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள “பிட்டு பம்புவ” என்ற அறையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனா்.
கடற்படையின் முன்னாள் தளபதியுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான பீட வளாகத்தில் அமைந்துள்ள "GUN SITE" என்ற சட்டவிரோத சிறைச்சாலையில் பாதிக்கப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனா் என்று மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனா்.
எனவே முன்னாள் கடற்படைத் தளபதியின் மீதான குற்றப்பத்திரிக்கையை திரும்பப் பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானமானது சட்டத்தினால் வழங்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.