வெசாக் பௌர்ணமி தினம் மாற்றப்படுமா?அரசின் நிலைப்பாடு!
வெசாக் பௌர்ணமி அரச விழாவை மே 30 ஆம் திகதி நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்கள் அரசுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து மே 30 ஆம் திகதி வெசாக் போயாவாக அறிவிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், போயா குழு கூடிய நிலையில் அதன் பரிந்துரைகள் இன்னும் கிடைக்கவில்லை.
அந்த பரிந்துரைகள் எங்களுக்குக் கிடைத்தவுடன்,நாம் எடுக்கும் முடிவுகள் தொடர்பில் அறிவிப்போம். தற்போதைய குழுவின் கணக்கீடுகளின்படி, வெசாக் போயா மே 1 ஆம் திகதி பிறக்கிறது.

அதன் பின்னர் மே 30 ஆம் திகதியும் ஒரு ஆடி போயா. பொதுவாக, அவர்களின் கருத்துப்படி, மே 01 ஆம் திகதியே போயாவாக இருக்க வேண்டும். ஆனாலும் மகாநாயக்க தேரரின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.
அதைக் கருத்தில் கொண்டு, மே 30 ஆம் திகதி வரும் போயா நாளில் அரச வெசாக் விழாவை நடத்தலாம். குழுவின் பரிந்துரை கிடைத்த பின்னர், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடலாம் என குறிப்பிட்டுள்ளார்.