தினமும் புலனாய்வுத்துறையினரால் பல்வேறு அச்சுறுத்தல்கள் - அ.அமலநாயகி
காணாமல்போன உறவுகளைத் தேடிவருவோர் தினமும் புலனாய்வுத்துறையினரால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்று வரும் சர்வதேச நீதி கோரிய சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 11வது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் அமைப்பின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் கோரிக்கைகளைச் சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தாங்கள் சாறி அணிந்து வெளியில் செல்லமுடியாத நிலையில் உள்ளதாகவும், தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்படுகின்றது.
தமது வீட்டிலிருந்து வெளியில் செல்லவேண்டுமானால் புலனாய்வுத்துறையினரிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் விண்ணப்பம் ஒன்று பூர்த்தி செய்து தரவேண்டுமெனவும், அழுத்தங்கள் செய்யப்படுவதாகவும் இங்கு வலிந்து காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



