கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு புதிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வு(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக் கூட்டமானது இன்று(28-07-2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியுள்ளது.
அபிவிருத்தி திட்டங்கள்
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால்
மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள்
தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இதனைவிட, மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக சட்டவிரோத மணல் அகழ்வு, போதைவஸ்து பயன்பாடு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு
குறிப்பாக ஊரியான் ,முரசுமோட்டை, குஞ்சுபரந்தன் ,குடமுருட்டி ,செருகன் ஆகிய பகுதிகளில் பொலிஸாரின் துணையுடனே குறித்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் விவசாய அமைப்புகளாலும் விவசாயிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதே வேளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளரால் அனுமதியற்ற மணல் அகழ்வுகளால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர் காலத்தில் மணல் அகழ்வை கட்டப்படுத்துவதற்கு பொலிஸாரால் எடுக்கப்படும் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார்.
மாவட்டத்தில் தினமும் பொலிஸாரின் துணையுடன் மணல் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுதல் போன்ற படங்களும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
வடமாகாண ஆளுளர் சாள்ஸ் ,பிரதம செயலாளர் சமன் பந்துல சேன ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
இதில் மேலும்,வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










