பிரான்ஸை அச்சுறுத்தும் மாறுபாடுடைய கொரோனா! தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம்
பிரான்ஸில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் சுய தனிமைப்படும் நாட்களை 7 முதல் 10 நாட்களாக அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரோன் அறிவித்துள்ளார்.
புதிய மாறுபாடுடைய கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தினார். கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நாம் தீவிர விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளையதினம் முதல், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் 10 நாட்கள் தனிமைப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் எந்த ஒரு மாறுபாடு தொற்றியிருந்தாலும் தனிமைப்பட வேண்டிய நாட்கள் 7 இல் இருந்து 10 நாட்களாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
பிரான்ஸில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள புதிய மாறுபாட்டின் அச்சம் காரணமாக காலத்தை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் நாளை முதல் 10 நாட்கள் தனிமைப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளேன்.
பிரேசில் அல்லது தென்னாபிரிக்க மாறுபாடுடைய கொரோனா தொற்றியவர்கள் தனிமைப்பட வேண்டிய காலப்பகுதி ஏற்கெனவே 10 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது பிரான்ஸில் அனைத்து விதமான கொரோனா தொற்றியவர்களும் 10 நாட்கள் தனிமைப்பட வேண்டும். பிரான்ஸில் புதிய மாறுபாடு பரவுவதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை இருக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
தனிமைப்படுத்தலின் பின்னர் PCR பரிசோதனையில் கொரோனா தொற்றவில்லை என்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அத்துடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்கள் வேலையில் இருந்து உடனடியாக விடுமுறை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.