வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நடப்பது என்ன...! நிர்வாகத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்
ஈழத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் அம்மன் ஆலயங்களில் ஒன்றாக முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் உள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் செயற்பாடுகள் தொடர்பில் ஆலயத்திற்கு சென்று வரும் பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலராலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றதனை அவதானிக்கலாம்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தூய்மையான சூழலை பேணுவதில் ஆலய நிர்வாகம் கவனமெடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கண்ணகியம்மன் ஆலய நிர்வாகத்தினர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் அக, புறச் செயற்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சமூகவலைத்தளங்களில் விமர்சனம்
"ஒவ்வொரு நிர்வாக கூட்டத்திலும் நாம் புதிய தலைவர்,செயலாளர்களை தெரிவு செய்வதே நம் கடமை.நாங்கள் வற்றாப்பளை அம்மன் அடியார்கள்" என்ற கருத்தினையுடைய முள்ளியவளையில் மக்களிடையே சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் அரசியல் செயற்பாட்டாளரின் முகநூல் பதிவிற்கு பலரும் கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து வரும் நிர்வாக ஆளுமையின்மை தொடர்பில் பக்தர்களிடையே நிலவி வரும் அதிருப்தியின் ஒரு வெளிப்பாடாகவே இத்தகைய முகநூல் பதிவுகள் நோக்கப்பட வேண்டும் என சமூக விடய ஆய்வாளரின் கருத்து அமைவதும் நோக்கத்தக்கது.
"தெருவில் வாழும் துறவியை தலைவர் ஆக்குங்கள். அவர்தான் விருப்பு வெறுப்புக்கள் அற்றவர். அது அரசியல்துறை நிர்வாகம் இல்லை. பாவம் கண்ணகித் தாய். மதுரையில் இருந்து ஏன் தான் வந்தாரோ?" என மேற்படி சமூகச் செயற்பாட்டாளரின் கருத்திற்கு மற்றொருவர் தன் கருத்தினை பகிர்ந்துள்ளார்.
இலைமறை காயாக நிர்வாகத்திலுள்ள முரண்பட்ட பொருத்தமற்ற செயற்பாடுகள் தொடர்பில் தன் கருத்தினை எடுத்தியம்பியுள்ளார்.
மற்றொருவரின் கருத்தும் இவ்வாறு அமைகின்றது." கொள்ளையர்கள் கூட்டமாகும் கோயில்கள்! ஆலயங்கள் எல்லாவற்றிலும் அடிச்சு துரத்தினாலும் நிர்வாகத்தை விட்டு அகலோம் என்றால் என்ன அர்த்தம்?
அந்தந்த ஆலயங்களை பிரதிநிதித்துவப்படுத்த அவர்களை தவிர வேறு உத்தமர்கள் இல்லை என்பதா அர்த்தம்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
எவ்வளவோ தேவைகள் உண்டு.ஆனால் பிரச்சினைகளை வளர்த்துக்கொண்டு போகிறார்கள் என கருத்திடும் ஆர்வலரும் உண்டு. "எனது பத்து வருட போராட்டம். போன வருடம் பொங்கலை அரசு நடத்திய போது அனுமதி தந்தார்கள்.வலை வேலி போடுவதற்கு.எண்ணிப் பாருங்கள்.அவ்வளவு பொலித்தீன்கள் கடலில் கலந்தால் நிலமையை.ஆனால் கடந்தவாரம் ஓர் சந்திப்புக்கு வந்துள்ளார்கள்.நிரந்தரமாக ஓர் அத்திவாரம் அமைத்து வலை வேலி போடுவதற்கு." என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வற்றாப்பளை அம்மன் ஆலயம் தொடர்பில் இடப்பட்டுள்ள முகநூல் பதிவிற்கு கருத்திடுவோரில் மாமூலை மாகவிஷ்ணு ஆலய சார்ந்த கருத்துக்களும் பகிரப்பட்டதோடு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருவிழாக்களின் போது வீசப்படும் பொலித்தீன் பைகள் தொடர்பிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு இருந்தன.
அபிசேக தீர்த்தம்
ஆலயங்களில் சுவாமி அபிசேகம் செய்து வரும் தீர்த்ததினை பருகி தலையில் தடவிக் கொள்ளும் பண்பாட்டியலை இந்து சமயத்தவர் கொண்டிருக்கின்றனர். இந்த இயல்பினை பின்பற்றிக்கொள்ளும் போது தீர்த்த வழியின் தூய்மை பற்றி பக்தர்கள் சிந்திப்பதில்லை.பக்தர்களின் சுகநலனில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினரும் கருத்தில் எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
மூலஸ்தானத்தில் இருந்து அபிசோக நீரானது வெளியேறும் பாதை சன்டேஸ்வரர் ஆலயத்தின் பக்கமாக இருக்கின்றது.அதில் நீர் நித்தம் பாய்ந்தோடும் வழித்தடங்களில் தோன்றும் வழமையான அழுக்குகள் தேங்கிக் கிடப்பதை காணலாம்.
சண்டேசுவரருக்கு பூசை செய்யும் போது பக்தர் இந்த பக்கத்தில் நின்று வழிபடுவது அசௌகரியமான ஒரு நிகழ்வாகும். தீர்த்தம் பெற்று பருகும் போது தீர்த்த வழியில் உள்ள அழுக்குகள் பற்றி பக்தர்கள் யோசிப்பதில்லை என்பது கவலை தரும் விடயம் என தன்னுடைய வாராந்திர திங்கள் வழிபாட்டுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு சென்று வரும் பக்தரின் கருத்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சன்டேசுவரர் அபிசேக நீர் வழிந்தோடும் இடத்திலும் இதே அழுக்குப் படிவுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடைசி பங்குனித் திங்கள்
2024 ஆம் ஆண்டில் வந்திருந்த பங்குனித் திங்கள் வழிபாட்டு நிகழ்வுகளின் இறுதித் பங்குனித் திங்கள் நிகழ்வு ஏனைய பங்குனித் திங்கள் நிகழ்வுகளிலிருந்து சிறப்பாக மஞ்சம் இழுத்தலுடன் நடைபெற்றிருந்தது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இது வழமையான நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் ஒழுங்கமைப்புத் தொடர்பிலும் ஆலயத்தின் தூய்மை தொடர்பிலும் அதிருப்தி வெளியிடப்படுவது பற்றிய கண்ணோட்டம் இனி அடுத்துவரும் வைகாசிப் பொங்கல் நிகழ்வுகளில் அத்தகைய தவறுகள் நிகழாதிருக்க உதவும் என தான் எதிர்பார்ப்பதாக சமூக விடய ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.
இராஜ கோபுரத்திற்கு முன்னுள்ள மஞ்சமோடும் பாதையின் காட்சி மனதிற்கு இனிமையளிப்பதாக இருக்கவில்லை.மஞ்சம் நகர்ந்து சென்ற பின்னர் அந்த நிலத்தில் நீரும் சகதியுமாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.ஆலயமொன்றின் இடங்களில் இத்தகைய சூழலை தவிர்த்திருக்கும் படி ஏற்பாடுகளை செய்திருக்கலாம் என்ற போதும் அது ஆலய நிர்வாகத்தினரால் கவனிக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.
ஆலயத்தின் தெற்கு வாயில் பக்கம் உள்ள ஆலயத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பாதை திறந்த வெளிக்கு நீரை வெளியேற்றும் படி இருப்பதனை அவதானிக்கலாம். இது ஆலயத்தின் புதிய கட்டிடங்களை அமைத்த நாள் முதல் இவ்வாறே இருப்பதாக பக்தர்கள் சிலர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
அழுக்குகள் நிறைந்த நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் அந்த இடம் துர் நாற்றம் வீசுவதோடு காட்சிப்புலத்திற்கு அருவருக்கத்தக்க தோற்றத்தினையும் தருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையினைத் தவிர்ப்பது கட்டாயமான போதும் ஏன் இதுவரை இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களும் கண்டு கொள்ளாது இருக்கின்றனர் என்ற கேள்வியை சமூக ஆர்வலர் எழுப்பியதும் தேடலின் போது அவதானிக்க முடிந்த விடயமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று மற்றொரு அவதானிப்பையும் பெறமுடிந்தது.தெற்கு வாயில் பக்கமாக உள்ள சாளரம் இரண்டின் வழியே வெற்றிலை பாக்கு மென்று துப்பிய தடயங்கள் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
வெற்றிலையை மென்று துப்பிய போது சாளரத்திலும் அதற்கு கீழே நிலத்திலும் அதன் கறைகள் இருப்பது ஆரோக்கியமானதல்ல. பொது இடங்களில் புகைப்பிடித்தல் போன்று வெற்றிலை துப்புவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.கறைத் தோற்றத்தினை காட்டாத எச்சிலை பொது இடங்களில் துப்புதலே சுகாதார கேடாக இருக்கின்ற போது வெற்றிலை பாக்கு சப்பித் துப்புத்தல் எந்தவகையிலும் சரியான சுகாதார நடைமுறையாக இருக்காது.
ஆனாலும் இந்த நிகழ்வை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அவதானிக்க முடிந்தது அங்கு சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவதில்லையா? என்ற கேள்வியை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.
ஆலயங்களில் தூய்மை வேண்டும்
ஆலயங்கள் என்பது மனதில் அமைதியை ஏற்படுத்தும் இடங்களாக அமைகின்றன என்பது வெளிப்படை. அத்தகைய ஆலயங்களில் அதிகளவான மனிதர்கள் கூடி வந்து வழிபாடுகளில் ஈடுபட்டுச் செல்லும் திருவிழாக்கள் நடைபெறுவதுவதால் அதனை ஒழுங்கமைப்பது ஆலய நிர்வாகம் மற்றும் அவ் ஆலயம் அமைந்துள்ள பிரதேச செயலகங்களின் பொறுப்பாகும்.
ஒழுங்கின்மை இனம் காணப்பட்டால் அது நிர்வாகத்திறமையின்மையின் வெளிப்பாடாகவே நோக்கப்படும். சிறந்த நிர்வாக திறன் பேணப்படும் இடமொன்றில் தவறுகளின் அளவு இழிவளவாக இருக்கும் என்பது உண்மை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடங்களை தூய்மையாக பேணுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் இன்னமும் நுணுக்கமான அவதானிப்பும் திட்டமிடலும் வேண்டும் என்பதற்கு சான்றாக இக்கட்டுரையில் மேற்சுட்டிய சில விடயங்களை நோக்குதல் போதுமானதாகும்.
பக்தர்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கருத்துக்கள் எழுவதும் அவை சமூக ஊடகங்களில் பகிரப்படுவதும் வழமையான ஒரு நிகழ்வாகிப்போகின்ற இன்றைய நாளில் ஆலயங்கள் பற்றிய ஆரோக்கியமான கருத்துக்களே அவ் ஆலயங்கள் மீது அடியவர்களுக்கு பக்திப் பரவசத்தினை ஏற்படுத்தும்.அதுவே ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கி அமைதியை பேணும் என்பது புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாகவிருப்பது கவலை தரும் விடயமாகும்.