வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் தீர்த்தம் எடுத்தல் உற்சவம் முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த தீர்த்த உற்சவமானது இன்று (13.05.2024) நடைபெற்றுள்ளதுடன் வருடாந்த உற்சவம் கடந்த 06ஆம் திகதி பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரிணை கடலிலே பெற்றுக் கொள்கின்ற அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பெருங்கடலில் தீர்த்தம்
இந்த வகையில் மாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி பறை வாத்தியம் முழங்க அடியவர்கள் புடைசூழ பாரம்பரிய வீதிகள் வழியாகச் சென்று தீர்த்தக்கரையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு உப்பு நீரில் விளக்கேற்றும் அரிய காட்சி இடம்பெறுவதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தின் அம்மன் சந்நிதியில் கடல் நீரின் தீர்த்தத்தில் விளக்கெரியும்.
காட்டா விநாயகர் ஆலய வைகாசி பொகங்கல் நிகழ்வினை தொடர்ந்து திங்கட்கிழமை (20) அதிகாலையில் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் : சதீஸ்