வற்றாப்பளை கண்ணகி அம்மன் நிகழ்த்திய அதிசயங்கள்..
வீரத்திற்கு பெயர் போன வன்னியின் முல்லைத்தீவு மண்ணில் கம்பீரமாய் வீற்றிருக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் விழா நிறைவடைந்துள்ளது.
பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்ட இலங்கை ஆலயங்களில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. பழமையும், தொன்மையும் வாய்ந்த புகழ்பூத்த ஆலயமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் திகழ்கின்றது.
நந்திக்கடலும், வயலும் என பசுமையான சூழலில், தனித்துவமாய் அமையப்பெற்றுள்ளது இந்த ஆலயம். இந்த ஆலயத்தின் அமைவிடம் வடக்கைச் சார்ந்து அமைந்திருந்தாலும், கண்ணகி அம்மனை வழிபட நாடு முழுவதும் இருந்து பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்புக்குரியது.
கண்ணகி வழிபாடு
அதிலும், தமிழர்கள் மாத்திரம் அல்லாது சிங்கள மதத்தவர்கள் முதற்கொண்டு கண்ணகி அம்மனை வழிபட முல்லைத்தீவுக்கு படையெடுப்பர்.
அரசியல்வாதிகள் முதற்கொண்டு, இராணுவத்தினர், பொலிஸார், மிக முக்கிய அதிகாரிகள் என்று அனைவரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்வது வழமை.
கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கிய சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலனார்கதை, கண்ணகி வழக்குரை என்பன காணப்படுகின்றன. கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கியதையும், அதன்பின்பு வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.
வாய்வழி வந்த கதைகளின் படி, முன்பு ஒரு காலத்தில் நந்திக் கடலோரத்தில், ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி வேப்பம்படவாளில் இருப்பதை ஆட்டிடைய குலச்சிறுவர்கள் கண்டார்கள். சிறுவர்களிடம் அவ்வம்மையார் தனக்குத் தங்குவதற்கு இடமில்லையென கூறிய போது அச்சிறுவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்துக் கொடுத்ததுடன் உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள்.
மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு எரிப்பதற்கு எண்ணெய் இல்லையே என்று மனம் வருந்தினார்கள். அவர்கள் கவலைப்படுவதைக் கண்ட அம்மூதாட்டியார் பிள்ளைகளே கடல் நீரை எடுத்து விளக்கேற்றுங்கள் என்றார். சிறுவர்களும் கடல் நீரையெடுத்து விளக்கு ஏற்றினார்கள். இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிக்கப்படுகின்றது. அப்போது அம்மையார் நான் வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன் எனக் கூறி திடீரென மறைந்தார்.
சிறுவர்கள் இதனை முதியவர்களுக்கு கூறினார்கள். இவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கு தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டியிருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர்.
பொங்கல் உற்சவம்
வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய கிழமை பொங்கல் செய்தனர் என்று மரபுக் கதைகள் கூறுகின்றன. முள்ளியவளையிலுள்ள காட்டு விநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கின.
வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழு நாள் மடைகளும், பொங்கலும் இன்றும் காட்டு விநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்த நையினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இவ்வருடமும் ஒன்று திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களால், மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் முறையிலும் கண்ணகி அம்மனுக்கு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் கண்ணகி வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டில் அரசனுக்கெதிராக வழக்காடி மதுரையை தீக்கிரையாக்கி அழித்த பின்னர் அவளின் கோபத்தைத் தணிப்பதற்காக இலங்கையின் கரையோரமாக வருகை தந்து பல இடங்களில் அமர்ந்திருந்து பத்தாவது இடமாக நந்திக் கடற்கரை அருகே வந்து தங்கியதால் பத்தாம்பளை என்பது மருவிப் பின்னர் ‘வற்றாப்பளை’ எனலாயிற்று.
சினம் கொண்ட கண்ணகிக்குச் சினத்தை அடக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோவலன் கண்ணகி கூத்தும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
 
    
    குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        