தமிழ் மூவேந்தர்களை வணங்கி தந்தை செல்வா அரங்கில் ஒலித்த வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று (20) மதியம் 3 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
அதன்பின் மணிக்கூட்டு கோபுரம் சதுக்கத்தை ஊர்வலமாக வந்தடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு வீற்றிருக்கும் தமிழ் மும் மன்னர்களுக்கும் அஞ்சலி செலுத்தி நிகழ்வின் ஏற்பாட்டு மண்டபத்தை சென்றடைந்த நிலையில் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு மாநாடு தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இனப்படுகொலை
அதனைத் தொடர்ந்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு ஆதீன முதல்வர் அகத்தியர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அத்தோடு, 50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளினால் அறிக்கையம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வட்டுக்கோட்டை தீர்மானத்தை துணிச்சலுடன் முன்னெடுத்த தந்தை செல்வா உட்பட்ட தமிழ் தலைவர்களை நினைவில் நிறுத்தி, அந்த தீர்மான கொள்கையை, தமது உயிரை அர்ப்பணித்து 2009ம் ஆண்டு வரை முன்னெடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கின்றோம்.

தமிழின அழிப்பால் இனப்படுகொலையால் படுகொலை செய்யப்பட்ட எமது தமிழ் உறவுகளை நினைவுகூருகின்றோம்.
எமது தேசத்தை மீள கோருகின்றோம். இன்று நாம் ஒன்றுகூடியிருப்பது ஒரு சாதாரண நினைவு கூரும் நிகழ்விற்காக அல்ல. மாறாக, ஈழத்தமிழர் வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையை நினைவுகூரவும், அதன் அர்த்தத்தை மீளாய்வு செய்யவும், எதிர்காலப் பாதையை வகுக்கவும் நாம் ஒன்று கூடியுள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



