யாழில் தடுப்பூசிகள் போடும் பணி நாளையுடன் நிறைவு! - பாதிப்பு எதுவுமில்லை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளையுடன் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் போடும் பணி முழுமையாக நிறைவடைகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கோவிட் தடுப்புக்கான சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி போடும் நிகழ்வைக் கண்காணிப்பதற்காக அங்கு வருகை தந்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கடந்த சில நாட்களுக்கு முன் யாழ். மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. இது நாளையுடன் முழுமையாகப் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கின்றோம்.
இதுவரை தடுப்பூசி போட்ட யாருக்கும் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை.
ஆகவே, தயங்காது அச்சப்படாது பொதுமக்கள் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்வி சார்ந்த - சாராத ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சின் சார்பில் எமக்கு விசேட பணிப்புரை வழங்கப்பட்டது.
அந்த அறிவித்தலின் பிரகாரம் தடுப்பூசி போடும் திட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில் பல்கலைக்கழகப் பணியாளர்கள் தடுப்பூசியைப் பெற்று வருகின்றனர்" - என்றார்.