அநுர அரசாங்கத்தில் ஒரு எம்.பிக்கான இடைவெளி : தேர்தல் ஆணையகத்திற்கு முக்கிய அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் தேர்தல் ஆணையகத்திற்கு எழுத்து பூர்வமாகத் தெரிவித்துள்ளது என்று நாடாளுமன்றத் தொடர்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 66(a) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் 6 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வெற்றிடம் குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் படி..
1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தால் திருத்தப்பட்ட, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 64(1) இன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர நேற்று (6) திடீர் மாரடைப்பால் காலமானார்.
கரவனெல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 38 வயதில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |