போராட்டக்காரர்கள் மீதான இராணுவத்தினரின் செயற்பாட்டிற்கு எதிராக மனு தாக்கல்
காலி கோட்டையில் ஜூன் 29ஆம் திகதி நடைபெற்ற அமைதி போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைப்பதற்கு இராணுவத்தினரை அனுப்பியமைக்கு எதிராக 11 சட்டத்தரணிகள் நேற்று(01) உயர் நீதிமன்றில் தனித்தனியாக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை உரிமை மனு தாக்கல்
சட்டத்தரணிகளான நளனி மனதுங்க, சந்தன கொடகந்தகே, கோபிகா லொகுகே, துசித மதுசங்க, சமித் துஷார கல்லகே, எரங்க ருவன் ஹேமந்த, ஜோத்திரத்ன ஆராச்சி, குமுது நாணயக்கார, சந்திரநாத் நாரங்கொட, ரேணுகா சாந்திமாலா மற்றும் குசுமாவதி பஹல கமகே ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அதிபர், இராணுவ தளபதி, சட்டமா அதிபர் மற்றும் பலர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஏனையவர்களுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கவும், இலங்கை அணியை உற்சாகப்படுத்தவும், அங்கிருந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நடத்தைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்ததாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
மனுதாரர்களின் கோரிக்கை
இதன்படி தமது குழுவினர், கைகளில் தேசியக் கொடிகளுடன், காலி கோட்டை மணிக்கூட்டு கோபுர பகுதிக்கு சென்ற வேளையில், அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் எவ்வித அதிகாரமும் இன்றி காலி கோட்டைக்கு வந்தமை சட்டவிரோதமானது என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளுக்கு சட்டப்பிரிவு 11, பிரிவு 12(1), உறுப்புரை 14(1)(ஏ), பிரிவு 14(1)(பி) மற்றும் 14(1)(பிரிவு 14(1) ஆகியவற்றால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசியலமைப்பின் இந்த உரிமைகள் பிரதிவாதிகளால் மீறப்பட்டுள்ளன எனவும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.