ஊடக நிறுவனத்திற்குள் நுழைந்து அச்சுறுத்துவது ஆரோக்கியமானதல்ல:கிளிநொச்சி ஊடக அமையம்
இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் எம் இனத்திற்குள்ளேயே நாம் ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்குமளவுக்கு ஊடக நிறுவனங்களுக்குள் அத்துமீறி உள்நுழைந்து செயற்படுவது கண்டிக்கத்தக்கது என கிளிநொச்சி ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் ஊடாக கிளிநொச்சி ஊடக அமையம் இதனை தெரிவித்துள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கை
அந்த அறிக்கையில்,இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதிலும் தமிழ் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் நிலைமை மேலும் மோசமானதாக காணப்படுகிறது.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் ஊடக நிறுவனத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த ஒரு மத அமைப்பைச் சேர்ந்த தரப்பினர்கள் ஊடக செயற்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு, அடாவடித்தனத்திலும் ஈடுப்பட்டனர். இச் செயற்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது அல்லது அவதூறானது என கருதும் தரப்பு அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுப்படுவது, அச்சுறுத்துவது என்பன அனுமதிக்க முடியாத செயற்பாடுகள்.
வன்மையான கண்டனம்
நீண்ட காலமாக பல்வேறு நெருக்கடிக்குள் தனது ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் உதயன் பத்திரிகையின் அலுவலகத்திற்குள் உள்நுழைந்து அச்சுறுத்தும் வகையில் ஒரு குழுவினர் நடந்துகொண்டமை கவலையளிப்பதோடு, அதற்கு நாம் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துகொள்கின்றோம்.
மேலும் மதத்
தலைவர்கள் சமூகங்களை அமைதியின் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும். வன்முறைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதனையும் கிளிநொச்சி
ஊடக அமையம் வலியுறுத்துகிறது என அவ்வறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
