யாழ். மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் அரச அதிபர் மக்களிடம் வேண்டுகோள்
தற்போதுள்ள அனர்த்த நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபாலசுந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய வறட்சி நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையின் படி 22,000 குடும்பங்கள் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குடிநீர் பற்றாக்குறை
அதில் சுமார் 8000 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக நெடுந்தீவு, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, மருதங்கேணி, சங்கானை போன்ற பிரதேச செயல பிரிவுகளில் இந்த குடிநீர் பற்றாக்குறை அல்லது மிக வரட்சியான நிலைமை காணப்படுகின்றது.
இந்த பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தின் ஊடாக, அந்த திணைக்களத்தினுடைய அனுசரணையுடன் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல தொடர்ச்சியாக மாவட்டத்தில் இருக்கக் கூடிய இந்த நிலைமை நீடிக்குமாக இருந்தால் சில வேலைகளில் இன்னும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதற்கு ஏற்றாற் போல் விரைவில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை அழைத்து ஒரு அனர்த்த முகாமைத்துவை தொடர்பான ஒருவிசேட கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
விவசாயம் பெருமளவில் பாதிப்பு
எனவே தற்போதுள்ள அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்.
அதேபோல விவசாயத்தால் பாதுகாக்கப்படுகின்ற மக்கள் சம்பந்தமாகவும், அதேபோல்
வரட்சியின் மூலமாக அன்றாடம் தொழில் இழந்துள்ளோர் தொடர்பிலும் விபரங்களை
சேகரித்து அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் அரசு நிறுவனங்கள் அல்லது அரசசார்பற்ற
நிறுவனங்கள் ஊடாக உதவிகளை வழங்குவதற்காக விரைவான ஒரு கூட்டத்தினை
கூட்டவுள்ளோம்.
தற்போதுள்ள வரட்சியான சூழ்நிலை காரணமாக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயிகளிடமிருந்து தனிப்பட்ட ரீதியாக விண்ணப்பங்கள் எதுவும் வரவில்லை. எனினும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது கிணற்று நீர் வற்றிக்கொண்டு போகின்றது.
எனவே ஒட்டுமொத்தமாக பிரதேச செயலகரீதியாக விவசாயிகளினுடைய பாதிப்பு சம்பந்தமான
ஒரு கணக்கெடுப்பினை செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.




