ரஸ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்தது அமெரிக்கா! பதில் நடவடிக்கையில் ரஸ்யா!
யுக்ரெய்ன் கிழக்கு பகுதிகளுக்குள் படையினரை அனுப்புவதன் மூலம் ரஸ்யா, சர்வதேச சட்;டத்தை மீறியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
யுக்ரெய்ன் நிலைமை தொடர்பில் வெள்ளை மாளிகை உரை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முதல் கட்ட நடவடிக்கையாக ரஸ்யாவின் இரண்டு பாரிய நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நிறுவனங்கள் மேற்கத்தைய நாடுகளில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாது என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த தடையானது, ரஸ்யாவின் தனிப்பட்டவர்கள் மீதும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவுடன் சண்டையிடும் நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், நேட்டோ அமைப்பு, தமது ஒவ்வொரு அங்குல நிலப்பிரதேசத்தையும் பாதுகாக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்டனும், வியாழக்கிழமை, ரஸ்ய வெளியுறவு அமைச்சருடன் இடம்பெறவிருந்த சந்திப்பை ரத்துச்செய்துள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு, ரஸ்யா, யுக்ரெய்னில் ஆக்கிரமிப்பை ஆரம்பித்து விட்டதை உணர்;த்தும் நிலையிலேயே அந்த சந்திப்பை ரத்துச்செய்துள்ளதாக என்டனி பிளிங்டன் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் யுக்ரெய்னில் தமது படையினரை அனுமதிப்பதன் மூலம் அந்த படையினரை அமைதி காப்பு படையினராக அறிவிக்கமுடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டனியோ குட்டரஸ் இதனை தெரிவித்துள்ளார்
ஒரு நாட்டு படையினர் இன்னும் ஒரு நாட்டின் எல்லையை கடந்து அந்த நாட்டில் பிரவேசிப்பது அமைதி காப்பு நடவடிக்கையாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ரஸ்ய படையினர் இன்னும் யுக்ரேய்னின் கிழக்கு பகுதிகளுக்குள் செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் யுக்ரெய்னில் இருந்து தமது இராஜதந்திரிகளை பாதுகாப்பு கருதி வெளியேற்றவுள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளது
ஏற்கனவே இங்கிலாந்து, ரஸ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஜேர்மனி, ரஸ்யாவில் இருந்து முன்னெடுக்கப்பட்ட குழாய்மூல எரிவாயு திட்டத்தை ரத்துச்செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ரஸ்ய ஜனாதிபதியின் அறிவிப்புக்கு இணக்கம் வெளியிட்ட அந்த நாட்டின் மேல் சபை உறுப்பினர்களுக்கு தடையை விதித்துள்ளது.