அமைச்சர் காலம் தாழ்த்தியே பதவி விலகியுள்ளார் - நாமல் ராஜபக்ச
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி காலம் தாழ்த்தியே பதவி விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.
அமைச்சரின் பதவி விலகலை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணைக்காக ஒருநாள் முழுமையாக ஒதுக்கப்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் குறித்த அமைச்சருக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சியினர் உதாசீனம் செய்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வெளிப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி ஊழல் மோசடியினால் தேசத்திற்கு பல மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சரின் பதவி விலகல் ஊடாக ஏற்பட்ட நட்டத்திற்கு எவ்வாறான நியாயம் கிட்டும் என்பது தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக இந்த பாரிய ஊழல் மோசடியினால் ஏற்பட்ட இழப்பினை நுகர்வோரே ஈடு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பதவி விலகலின் ஊடாக உண்மையிலேயே இழப்பீட்டை செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே என தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு எதிராக கடந்த காலங்களில் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும் அவருக்கு மிகவும் பலம் பொருந்திய ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதன் பொறுப்பினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அவருடைய வரலாற்றை நன்றாக அறிந்திருந்த ஜனாதிபதி அவரை மின்வலு மற்றும் எரி சக்தி அமைச்சராக நியமித்ததுடன் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட காலத்திலும் அவரை பாதுகாக்க முயன்றார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பாரிய நட்டத்திற்கு ஜனாதிபதியும் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.