ஐரோப்பா முழுவதும் இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம் - பைடன் வெளியிட்ட அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா தனது இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் உருவாக்கப்படும் எனவும், அதே நேரத்தில் புதிய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரைப்படைகள் ருமேனியாவுக்கும் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கூட்டணி தலைவர்களை சந்தித்தபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு உதவும் பிரித்தானிய கண்காணிப்பு விமானங்கள்
இதேவேளை, பிரித்தானிய கண்காணிப்பு விமானங்கள் உக்ரைனின் சிக்கியுள்ள தானியங்களை விடுவிக்க பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு உதவக்கூடும் என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட துறைமுகங்களில் இருந்து தானியக் கப்பல்கள் வெளியேறுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், கருங்கடலின் பகுதிகளில் கண்காணிப்பு விமானங்கள் ரோந்து செல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாட்ரிட்டில் இடம்பெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ரோயல் கடற்படை போர்க்கப்பல்கள் கருங்கடலுக்கு அனுப்பப்படும் வாய்ப்பை குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.