உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் பாதுகாப்பு உதவியை அறிவித்தது அமெரிக்கா
உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இன்று காலை தனது உக்ரேனியப் பிரதிநிதியுடன் ஒரு அழைப்பிற்குப் பிறகு, பீரங்கி மற்றும் கடலோரப் பாதுகாப்பு ஆயுதங்கள் உட்பட பாதுகாப்பு உதவியாக ஒரு பில்லியன் டொலர் உதவி அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்அறிவித்துள்ளார்.
இந்த தொகுப்பில் வெடிமருந்துகள் மற்றும் டான்பாஸ் பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் அட்வான்ஸ் ரொக்கெட் அமைப்புகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான குடிநீர், மருத்துவப் பொருட்கள், உணவு, தங்குமிடம் மற்றும் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு உதவும் வகையில் கூடுதலாக 225 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியையும் பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைன் படைகளுக்கு அமெரிக்கா பயிற்சி
இதனிடையே, ஹிமார்ஸ் ரொக்கெட் அமைப்பு, வெடிமருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற குழுவினருடன் இந்த மாத இறுதிக்குள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் மார்க் மில்லி அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் உறுதிமொழியைப் பெற்ற பின்னரே ஆயுதங்களை வழங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா முன்னர் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவும் நட்பு நாடுகளும் 60 உக்ரேனியப் படையினருக்கு பயிற்சி அளித்ததாக ஜெனரல் மில்லி தெரிவித்துள்ளார்.