ஈரான் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
அமெரிக்க ராணுவம் தெற்கு ஈரானில் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையிலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் பின்னணியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஈரானிய படகுகளைக் குறிவைத்து இந்த "தற்காப்புத் தாக்குதல்கள்" நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது.

ஈரானியப் படைகளால் எங்கள் ராணுவ வீரர்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கப் படைகள் இன்று தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைகத்தின் செய்தித் தொடர்பாளர் டிமோதி ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், "கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானியப் படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் ஆகியவை இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்குகளாக காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் போர்நிறுத்தக் காலத்தில், அமெரிக்க மத்திய கட்டளைகம் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், எங்கள் படைகளைப் பாதுகாக்கும் தற்காப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இந்த மோதல் சம்பவம், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு சிறிய முட்டுக்கட்டையாகப் பார்க்கப்பட்டாலும், இந்தத் தருணத்தில் இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்து போகாது என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.