இலங்கைக்கு எரிபொருள் வழங்கிய ஈரானிய நிறுவனங்கள் மீது ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை
ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட 50 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அண்மையில் தடைகளை விதித்தது.
அவற்றில் ஈரானின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை இலங்கைக்கு அனுப்ப உதவிய இரண்டு நிறுவனங்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள குறித்த இரண்டு நிறுவனங்கள் ஸ்லோகல் எனர்ஜி டிஎம்சிசி மற்றும் மார்கன் ஒயிட் டிரேடிங் ஆகும்.
அமெரிக்க தடை
பொருளாதாரத் தடைகளை விதித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை, ஈரானுக்கு பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை ஈட்ட மறைமுகமாக பங்களித்துள்ளதாகவும், ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, சீனாவுடன் தொடர்புடைய நிறுவனங்களான ஸ்லோகல் எனர்ஜி டிஎம்சிசி மற்றும் மார்கன் வைட் டிரேடிங் ஆகியவை ஈரானிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை இலங்கைக்கு வழங்கியுள்ளன.
இந்நிலையில், இரண்டு நிறுவனங்கள் மீதும் தடைகளை விதிப்பதால், இலங்கை இறக்குமதியாளர்கள் தங்கள் கொள்வனவு பதிவுகளை பெறுவதில் தாமதம் அல்லது செலவுகள் அதிகரிக்கும் என்றும், இது விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
பெட்ரோலிய எரிவாயு
வெளியுறவுத்துறை அறிக்கையின்படி, கடந்த ஆண்டு, மார்க் ஒயிட் டிரேடிங் நிறுவனம், ஸ்லோகல் எனர்ஜி டிஎம்சிசி மூலம் மில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஈரானிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை நாட்டிற்கு விற்பனை செய்வதற்கும் அனுப்புவதற்கும் வசதி செய்தது.

கடந்த ஆண்டும் இந்த ஆண்டும், ஸ்லோகல் எனர்ஜி நிறுவனம் இலங்கை மற்றும் பங்களாதேஷத்திற்கு மில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஈரானிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை வாங்கியதாகவும், அது இலங்கை மற்றும் பங்களாதேஷை அடைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
ஸ்லோகல் எனர்ஜி டிஎம்சிசி மற்றும் மார்கன் ஒயிட் டிரேடிங் மீது அமெரிக்க வெளியுறவுத்துறை தடைகளை விதிப்பது இது நான்காவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.