ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்த அமெரிக்கா
ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் காப்பீடு என்ற பெயரில் சட்டவிரோதப் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இரு ஈரானிய நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.

‘பெர்சியன் கல்ஃப் மேரின் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘ஹோர்முஸ் சேஃப் மேரின் சர்வீசஸ் அத்தாரிட்டி’ ஆகிய இரு நிறுவனங்களுக்கே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் பின்னணியில் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் வணிகக் கப்பல்கள் கட்டாயக் கடல்சார் ‘காப்பீட்டை’ வாங்குமாறு நிர்பந்தித்து பணத்தைப் பறிக்கும் சட்டவிரோதத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
கப்பல்களைக் கைப்பற்றுதல் போன்ற பெரும்பாலான அபாயங்களை ஈரானே செயற்கையாக உருவாக்கிவிட்டு, அந்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி வணிகக் கப்பல்களிடம் நிதியை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் பெறப்படும் வருவாய், ஈரானிய ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஊழல் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுமட்டுமன்றி, தடைகளை மீறி ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ இரசாயன பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்திச் சென்ற 'நிழற்படை' கப்பல்களை இயக்கிய நிறுவனங்கள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.
உலகின் மிக முக்கியமான கடல்வழி வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஈரான் முயன்று வரும் நிலையில், அங்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்வது சர்வதேச அளவில் பெரும் சவாலாக நீடித்து வருகிறது.