இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான் : அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள காத்திருப்பதன் காரணமாக இஸ்ரேலில் உள்ள தனது ஊழியர்களின் பயணத்தை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி ஜெருசலேம் (Jerusalem), டெல் அவிவ் அல்லது பீர்ஷெபா (Tel Aviv or Beersheba) பகுதிகளுக்கு வெளியே பயணிக்க வேண்டாம் என மிகுந்த எச்சரிக்கையுடன் தனது ஊழியர்களுக்கு அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளது.
இராஜதந்திர முயற்சிகள்
இந்த தூதரகத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஈரான்படையின் மூத்த தளபதியும், மற்ற இராணுவப் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா போர் பிராந்தியம் முழுவதும் பரவுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடரும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஈரான் தாக்குதலை நடத்தப்போவதாக எச்சரித்ததோடு, இஸ்ரேலுக்கு "இரும்புக் கவச" ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஈரானின் ஆதரவு
இதேவேளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், எந்தவொரு பாதுகாப்பு சவாலையும் சந்திக்க தனது அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், இஸ்ரேல் தனக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நாட்டிற்கும் பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் லார்ட் கேமரூன் (Lord Cameron) தனது ஈரானிய வெளியுறவு அமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இஸ்ரேலுடனான மோதலை தடுக்கவும் அது தீவிரமடைவதற்கு எதிராகவும் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் இஸ்ரேலுடன் சண்டையிடும் ஆயுதமேந்திய பாலஸ்தீனக் குழுவான ஹமாஸை ஈரான் ஆதரிப்பதுடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போன்ற அமைப்பினரையும் ஈரான் ஆதரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.