ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல்: ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் ஐரோப்பிய நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தச் செய்தி தங்களுக்கு "தெளிவாகக் கிடைத்துவிட்டதாக" நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
ஆர்மீனியாவில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்காவின் ஏமாற்றத்தைப் புரிந்துகொள்வதாகவும், இனி நேட்டோ அமைப்பில் ஐரோப்பிய நாடுகள் அதிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தங்கள் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
பொருளாதாரச் சுமை
அமெரிக்காவின் இந்தத் திடீர் முடிவுக்கு ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரடெரிக் மெர்ஸ் சமீபத்தில் தெரிவித்த விமர்சனங்களே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஈரான் மீதான போரை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போருடன் ஒப்பிட்ட மெர்ஸ், இது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த இராணுவத் தலையீட்டை "நியாயமற்றது" எனக் கண்டனம் செய்ததால், அந்த நாட்டின் மீதான வர்த்தகத் தொடர்புகளைத் துண்டிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியிலும், ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தைக் கையாள சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.