மொஸ்கோவில் அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானம் தரையிறக்கம்
அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின் நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
07-7181 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த போயிங் குளோப்மாஸ்டர் ரக இராணுவ விமானம், லத்வியாவின் ரிகா நகரிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு மொஸ்கோவில் தரையிறங்கியுள்ளது.
எனினும், இவ்விமானத்தில் பயணிகள் அல்லது பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை
அத்துடன், இப் பயணம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வொஷிங்டனில் உள்ள கெம்ப் ஸ்ப்ரிங்ஸ் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம் ரிகாவை வந்தடைந்திருந்தது.

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விசேட பிரதிநிதிகள் வருகை தந்ததனைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலிருந்து ரஷ்யாவிற்கு நேரடியாக அமெரிக்க விமானமொன்று பயணித்துள்ளமை இதுவே முதன்முறையாகும்.
ஈரானில் இடம்பெற்று வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இப் திடீர் பயணம் பிராந்திய அரசியல் களத்தில் அவதானத்தைப் பெற்றுள்ளது.