எங்கள் வழியில் குறுக்கிட்டால்..! ஓமானுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை..
ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
Fox News-க்கு வழங்கிய நேர்காணலின்போது, “ஓமன் எங்கள் வழியில் குறுக்கிட்டால், அந்த நாட்டை கடுமையாக குண்டுவீசித் தாக்குவோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் அதிகாரிகளுக்கு இடையில் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் பின்னணியிலேயே ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
மேலும், ஈரான் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் சிறந்த போக்கர் வீரர்கள். ஆனால் அவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இலக்கு
அதேவேளை, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தனக்கென எந்த காலக்கெடுவும் இல்லை என்றும், தான் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ளாதிருப்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான இலக்கு என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.