அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை நாளை ஓமான் தலைநகரில்
மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை நாளை ஓமான் தலைநகர் மஸ்கட்டில் தொடங்குகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய 12 நாள் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் நேரடியாகச் சந்திக்கும் முதல் முக்கியப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி "மிகவும் கவலைப்பட வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
"அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி மையங்கள்
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணுசக்தி விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தத் தயார் என்று கூறியுள்ளார்.

ஆனால், அமெரிக்கா தரப்பில் ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு போன்றவற்றை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் வெடித்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை சுமார் 6,400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் (HRANA) தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என கூறியுள்ள ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி மையங்களை கடந்த ஆண்டு அமெரிக்க போர் விமானங்கள் "முற்றிலுமாக அழித்துவிட்டன" என்றும் மீண்டும் அணு ஆயுத முயற்சியில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையை ஓமன் ஒருங்கிணைக்கிறது. ஆரம்பத்தில் துருக்கியில் நடக்கவிருந்த இந்தப் பேச்சுவார்த்தை, ஈரானின் கோரிக்கையை ஏற்று ஓமனுக்கு மாற்றப்பட்டது.
சர்வதேச அளவில் நிலவும் இந்த பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளும் இந்த ராஜதந்திர முயற்சியில் ஆர்வம் காட்டி வருகின்றன.
நாளை காலை 10:00 மணிக்கு (மஸ்கட் நேரம்) பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதில் அமெரிக்க தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரானின் அப்பாஸ் அராக்சி ஆகியோர் பங்கேற்கின்றனர்.