வெளிநாட்டு அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்கா
அமெரிக்கர்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயற்சிக்கும் முக்கிய வெளிநாட்டு அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பவர்களை மௌனமாக்குவதற்காக "தணிக்கை" (Censorship) என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விசா கட்டுப்பாடு
குறிப்பாக, அமெரிக்க இறையாண்மையை மீறி எல்லை தாண்டிய தணிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் "சர்வதேச தணிக்கை-தொழில்துறை கூட்டமைப்பின்" முகவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குப் பொதுவாக தடை விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" (America First) வெளியுறவுக் கொள்கையானது அமெரிக்க இறையாண்மையை மீறும் எந்தவொரு செயலையும் திட்டவட்டமாக நிராகரிப்பதாகத் தெரிவித்த ரூபியோ, அமெரிக்கர்களின் பேச்சுரிமையைக் குறிவைத்து வெளிநாட்டுத் தணிக்கையாளர்கள் மேற்கொள்ளும் எல்லை தாண்டிய அத்துமீறல்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் ஆணையாளர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் 5 பேருக்கு ஏற்கனவே இந்த அடிப்படையில் விசா மறுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.