சீனாவினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரிக்கை
சீனாவினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழங்கிய கடனைப் பயன்படுத்தி இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கு சீனா அழுத்தங்களை பிரயோகிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் டொனால்ட் லூ இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு மிக அருகில் காணப்படும் நாடுகளுக்கு சீனா கடனுதவிகளை வழங்கி அவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்திய வலய நாடுகள் தீர்மானம்
புறச்சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணியாது தாங்களாகவே பிராந்திய வலய நாடுகள் தீர்மானம் எடுப்பதனை உறுதி செய்ய வேண்டுமெனவும் அதற்கான உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா தனியான நிபந்தனைகளை விதிப்பதாக அறிவித்துள்ளதாகவும், பொது இணக்கப்பாட்டை எட்ட விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.