ஈரானிய எண்ணெய் தடையை தளர்த்தும் அமெரிக்கா: எரிசக்தி சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
மத்திய கிழக்கில் நடக்கும் போரின் காரணமாக எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே அனுப்பப்பட்டு வரும் ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் நேற்று (19.03.2026) அறிவித்துள்ளார்.
எண்ணெய் விலை அதிகரிப்பு
அமெரிக்கா, நுகர்வோரின் எரிசக்தி செலவுகளை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்யும் நிலையில், இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், “எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் பரிசீலனையில் இல்லை” என்றும், தடைகளை தளர்த்துவது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களின் இலக்கான தெஹ்ரானுக்கு சாதகமாக அமையும் அபாயம் உள்ளது என்றும் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சிலர், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான கூட்டணியை உருவாக்கும் வழியாக இதைக் கருதுகின்றனர். கட்டாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) நிலையத்தை ஈரான் தாக்கியதும், அப்பகுதியின் எரிசக்தி உள்கட்டமைப்பை அழிக்குமாறு அச்சுறுத்தியதும், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் மீண்டும் உயர்வடைந்துள்ளன.
இது பற்றிய கருத்தை பெசென்ட், ஃபாக்ஸ் பிசினஸ்ஸிடம் தெரிவித்தார். செலவுகளைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக, அமெரிக்க அரசு தனது மூலோபாய இருப்புகளிலிருந்து மேலும் எண்ணெய் வெளியிடக்கூடும் என்றும் அவர் கூறினார்.
தெஹ்ரான் பதிலடி
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, தெஹ்ரான் பதிலடி கொடுத்ததால், ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது.

இதனால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன, எரிசக்தி விநியோகச் சங்கிலிகள் சிக்கலடைந்துள்ளன, தற்போது அமெரிக்க நுகர்வோரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அமைதிக் காலத்தில், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் சுமார் ஐந்தில் ஒன்று இந்த முக்கிய நீர்வழிப்பாதை வழியாகப் போக்குவரத்து செய்யப்படுகிறது.
இதற்கிடையே, சர்வதேச அளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை முன்னதாக 10 சதவீதம் உயர்ந்ததையடுத்து, பின்னர் பீப்பாய் 110.67 டொலராகவும், 3.1 சதவீத உயர்வுடன் தணிந்தது.
விலைகளை கட்டுபடுத்த முடிவு
போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க பெட்ரோல் விலைகளும் உயர்ந்துள்ளன. பெசென்ட் மதிப்பீட்டின் படி, சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெய் கடலில் உள்ளது.

இது, சீனாவுக்குச் செல்ல வேண்டிய இரண்டு வார கால விநியோகத்திற்கு சமமாகும். வாஷிங்டன், விலை உயர்வுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் நிலையில், ஈரானிய எண்ணெய் பீப்பாய்களை தெஹ்ரானுக்கு எதிராகப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் மீதான தடைகளை தளர்த்துவதன் தோற்றம், மேலோட்டமாகப் பார்க்கும்போது முரண்பாடாகத் தெரிகிறது என்றும், லிபோ ஆயில் அசோசியேட்ஸ் ஆண்டி லிபோ குறிப்பிட்டுள்ளார்.
“நாம் அவர்களுடன் போரில் இருக்கும் அதே நேரத்தில், ஈரான் தங்கள் எண்ணெய்யை விற்க அனுமதிப்பது போன்று இது தோன்றுகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO