வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதா? அமெரிக்க அரசாங்கம் விசாரணை
மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) செயலி தொடர்பில் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட்ஸ்அப் பயனர்களின் குறியாக்கப்பட்ட (encrypted) தனிப்பட்ட உரையாடல்களை மெட்டா நிறுவனத்தினால் வாசிக்க முடியும் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் தொழில்நுட்ப உலகிலும், பயனர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், “வாட்ஸ்அப் பயனர்களின் ‘தனிப்பட்டவை’ என கூறப்படும் உரையாடல்களின் பெரும்பகுதியை மெட்டா அணுகும் திறன் கொண்டுள்ளது” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வர்த்தகத் துறை (US Department of Commerce) அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் முழுமையாக நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானதும், அர்த்தமற்றதும் என மெட்டா பேச்சாளர் கார்ல் வூக் தெரிவித்துள்ளார்.
மேலும், இது இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ குருப்பிற்கு ஆதரவாக செய்யப்படும் முயற்சி எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
NSO Group என்பது பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ‘பெகாசஸ்’ (Pegasus) உளவு மென்பொருளை உருவாக்கிய நிறுவனம் ஆகும்.
கடந்த ஆண்டு, வாட்ஸ்அப் தொடர்ந்த வழக்கில், அந்த நிறுவனம் 167 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மெட்டாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள Quinn Emanuel Urquhart & Sullivan என்ற சட்ட நிறுவனம், அவுஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த “துணிச்சலான தகவலாளர்கள்” (whistleblowers) வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தலைப்புச் செய்திகளை உருவாக்கவே எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சட்ட நிறுவனம் தான், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை உளவு பார்த்த NSO Group-க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகாவோ அல்லது அதன் அறிக்கைகள் தொடர்பிலோ அமெரிக்க அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.