இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தொடர்ந்தும் பேணும் நாடுகள்
அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான சுற்றுலா தொடர்பான பயண ஆலோசனைகளை தொடர்ந்தும் பேணுகின்றன.
இதன்படி தொடர்ந்தும் தமது பிரஜைகளை இந்த இரு நாடுகளும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு எச்சரித்து வருகின்றன.
கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட அமெரிக்க பயண ஆலோசனையில், எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு, உள்நாட்டு அமைதியின்மை மற்றும் பயங்கரவாதம் காரணமாக, தமது நாட்டவர்கள் இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
கண்ணீர்ப்புகை பயன்பாடு
இதேவேளை, கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியாவினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட பயண ஆலோசனை, இன்றும் நடைமுறையில் உள்ளது.
உள்நாட்டு அமைதியின்மை அச்சுறுத்தல், எரிபொருள் மற்றும் இதர பொருட்களின் பற்றாக்குறை மற்றும் பயங்கரவாத அபாயம் காரணமாக இலங்கையில் தமது நாட்டவர்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் பயண ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிரித்தானியாவினால் வெளியிடப்பட்டு கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், சமீபத்திய மாதங்களில், எதிர்ப்பாளர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பயண ஆலோசனை
எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலைத் தடைகள் மற்றும் வன்முறை அமைதியின்மை குறுகிய அறிவிப்பில் ஏற்படலாம்.
ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களும் விதிக்கப்படலாம். எனவே பிரித்தானிய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என பிரித்தானியாவின் பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |