உறுமய தேசிய வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை
காணி உரிமை வழங்கும் "உறுமய தேசிய வேலைத்திட்டத்தை" ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஒட்டகப்புலம் பகுதியில் இன்று (22) நடைபெற்ற "உறுமய" காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும், உரையாற்றிய ஜனாதிபதி,
காணி உரிமம் வழங்க தீர்மானம்
“அரச காலத்தில் காணி உரிமை மக்களிடமே காணப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் தரிசு நிலச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் காணிகள் அபகரிக்கப்பட்டன.
அதன்படி நாட்டின் 80% காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானது. அந்த காணிகளுக்கான அனுமதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தாலும் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அதனால் மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளின் உறுதிகளை மக்களிடம் மீளக் கையளிக்க எதிர்பார்க்கிறோம்.
அதனால் அனைவருக்கும் காணி உரிமம் வழங்க தீர்மானித்தோம். எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை கிடைக்க வேண்டும். அதற்காக உறுமய வேலைத்திட்டம் அண்மையில் தம்புளையில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று ஒரு சிலருக்கு மாத்திரம் அதன் பலன் கிடைத்திருந்தாலும் ஜூன் மாதமளவில் அந்த வேலைத்திட்டத்தினை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். மேலும் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகத்தை தெரிவு செய்துள்ளோம். இது யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் செய்யப்படுகிறது. இதன் மூலம், இந்த மாகாணம் நவீன விவசாயத்தைப் பெறுகிறது.
இராணுவத்தின் கட்டுப்பாடு
அதே சமயம் வருமானமும் அதிகரிக்கிறது. யுத்தத்தின் பின்னர் பெருமளவிலான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்பட வேண்டியிருந்தது. இதுவரை 31,000 ஏக்கர் அரச காணிகளையும், 24,000 ஏக்கர் தனியார் காணிகளையும் அரசாங்கம் விடுவித்துள்ளது.
மொத்தம் 63,000 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 1800 ஏக்கர் அரச காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 856 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.
2600 ஏக்கர் அரச காணிகளையும் 68 ஏக்கர் தனியார் காணிகளையும் விமானப்படை விடுவித்துள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்னர், 101 ஏக்கர் காணி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |