போலி நாணயத்தாள்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், திட்டமிட்ட மோசடிகளுக்கு பலியாகாமல் செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புழக்கத்தில் போலி நாணயத்தாள்கள்
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொட்டிகாவத்தை பகுதியில் 55 வயது பெண் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 6,300 போலி 100 அமெரிக்க டொலர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள் அவதானம்
இந்த ஆண்டு (2026) இதுவரை 251 போலி நாணயத்தாள்களும், 6,924 வெளிநாட்டு நாணயத்தாள்களும், பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, அன்றாட வங்கி அல்லது வர்த்தக பரிவர்த்தனைகளின் போது நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் போதும் அதன் பாதுகாப்பு விளிம்பு, நீர் புகாத முத்திரை மற்றும் பிற சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு கிடைத்த நாணயத்தாள்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அந்த நாணயத்தாள்களை மீண்டும் புழக்கத்திற்கு விட முயற்சிக்காமல், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.