கோடிக்கணக்கான பணமோசடி: வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை
இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கியிருந்த சீன, இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாள பிரஜைகள் அடங்கிய குழு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் நடவடிக்கை
இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது.
மேலும், இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவிய இலங்கையிலுள்ள பல வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய விசாரணைகள் நடத்தப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெளிநாட்டுப் பிரஜைகள், ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் மோசடிகளில் ஈடுபட்ட பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |