நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, புத்தி கண்டகி (Budhi Gandaki) ஆற்றின் கீழ்நிலைப் பகுதிகளில் கடுமையான வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் எச்சரித்துள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திடீர் வெள்ளப்பெருக்கு
நேற்று (11) காலை சுமார் 6:00 மணியளவில் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோர்கா, தாடிங், நுவாகோட் மற்றும் சித்வான் மாவட்டங்களிலோ அல்லது புத்தி கண்டகி ஆற்றுப் பள்ளத்தாக்கிலோ தற்போது வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் உடனடியாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தூதரகம் வன்மையாக அறிவுறுத்துகிறது.
உள்ளூர் அதிகாரிகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் சுற்றுலா பொலிஸாரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நிலைமை சீராகும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தல்
காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம், தங்கும் விடுதி, பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நேபாளத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள், வீதி நிலைமைகள் பாதுகாப்பானவை என்றும் வெள்ள அச்சுறுத்தல் நீங்கிவிட்டது என்றும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படும் வரை தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைகளுக்கும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653 மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.