ஒலுவில் துறைமுகத்தை மீளச் செயற்படுத்த துரித நடவடிக்கை - நாடாளுமன்றில் பிரதி அமைச்சர் உறுதி
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேன்தகு முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(09.09.2026) நாடாளுமன்ற அமர்வின்போது, துறைமுகங்களின் தற்போதைய நிலை, மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சுருக்கு வலைப் பயன்பாட்டுக்கான அனுமதிப்பத்திர விதிமுறைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகம் நீண்டகாலமாக மணல் படிவத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வர்த்தகக் கப்பல்கள் வருவதில் உள்ள சிரமம்
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே,
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அலைகளின் வேகம், காற்றின் வேகம், கடல் நீரோட்டங்களின் தன்மை மற்றும் மணல் நகர்வு உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் போதுமான அறிவியல் மற்றும் முறையான சாத்தியக்கூறு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதமையே துறைமுகத்தின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சுமார் நான்கு தசாப்தங்களாக துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், போதிய அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படாததன் காரணமாக துறைமுகத்தின் நுழைவாயிலில் பாரியளவில் மணல் படிந்துள்ளது.
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி ஆய்வுகள், கிடைக்கப்பெற்ற அறிவியல் தரவுகள் மற்றும் மீனவ சமூகத்தினரின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உரிய முறையில் திட்டமிடப்படாததன் விளைவாக, தற்போது வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றன.
துறைமுகங்களில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில், துறைமுகப் பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்றி அதனைப் பெறுவதில் அவை அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றன.
எனினும், கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த மணலில் முக்கியமான கனிமப் பொருட்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்களும் உள்ளன.

இதனால், தற்காலிகத் தீர்வுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, ஒலுவில் துறைமுகப் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிலையானதும் விஞ்ஞானப்பூர்வமானதுமான தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்காக ஜனாதிபதி அலுவலகம், சுற்றாடல் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.