டிஜிட்டல் கட்டண முறை: இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்
தமது வங்கிக் கணக்குள்ள நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் வர்த்தகம் தொடர்பான (பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள்) QR குறியீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தக் குறியீட்டை வழங்கக் கடமைப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு
டிஜிட்டல் QR குறியீடு மூலம் ஒருங்கிணைந்த கட்டண முறை அல்லது UPI அறிமுகப்படுத்திய பின் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12.02.2024) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெரும்பாலான இந்தியர்கள் QR குறியீடு ஊடாக கொடுப்பனவுகளை செலுத்துவதற்குப் பழக்கப்பட்டிருப்பதால், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக சமூகத்திற்கு பணம் செலுத்துவதற்கு UPI தொலைபேசி செயலிகளை தடையின்றி பயன்படுத்தலாம்.
ஏற்கனவே உள்ளுர் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உகந்த முறைமையான LankaQR ஊடாக QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கொடுப்பனவுகளை செலுத்த முடியும்.
வங்கிக் கடன்
இதன்மூலம் செலுத்தப்படும் பணம் இலங்கை ரூபாவில் உரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும்.
இவ்வாறான வருமானத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு 06 மாதங்களில் குறுகிய காலத்தில் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.
இரண்டாவது கட்டத்தில், இந்த கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன், இந்தியாவில் QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதியை இலங்கையர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |