கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் : மேனகா கந்தசாமி
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரை நாங்கள் போராட்டத்தினை கைவிட மாட்டோம் எனவும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி தெரிவித்துள்ளார்.
ஹட்டன் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்க அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இப்போது நாங்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். முதலாம் கட்டத்தில் கடிதங்கள் மூலம், கலந்துரையாடல்கள் மூலம் இந்த பிரச்சினையினை தீர்க்க முற்பட்டோம் ஆனால் அவற்றிக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இப்போது நாங்கள் பகுதி பகுதியாக தொடர் போராட்டங்களை செய்ய முன்வந்துள்ளோம். அதிலும் சரிவரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை நிச்சயமாக எடுப்போம்.
அது மாத்திமின்றி கூட்டு ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு புறம் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்த நாட்டின் தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை பாதுகாக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது ஆகவே இதனை செய்யாத பட்சத்தில் நாங்கள் உயர்நீதி மன்றத்தினை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
அதே நேரம் ஆயிரம் ரூபா பிரச்சினை என்பது யாருக்கும் ஒரு புதிய பிரச்சினையல்ல. ஆகவே அரசியல் வாதிகளும் தொழிற்சங்க திணைக்கள அதிகாரிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
கம்பனிகள் அன்றும் இன்றும் உச்ச இலாப நோக்காக கொண்டே செயப்பட்டு வந்துள்ளனர். எந்தெந்த காரணங்கள் அவர்களுக்கு சாதகமாக உள்ளதோ இந்த காரணங்களை அவர்கள் பற்றிக்கொள்வார்கள்.
சில காலங்களுக்கு முன்பு கோவிட் பிரச்சினையினை ஒரு காரணமாக வைத்து தொழிலாளர்களுக்கு அதிகூடிய சுரண்டல் நடைபெற்றது. தொழிலாளர்கள் தொழில் செய்தாலும் கோவிட் என்ற பிரச்சினையினை காரணம் காட்டி பிரச்சினையினை பேச முடியாது என்று இருந்தார்கள். அதே போல் தான் இன்று இந்த கூட்டு ஒப்பந்தத்தினையும் ஒரு சாட்டாக வைத்திருக்கிறார்கள் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந் நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் உபதலைவர் செல்லையா சிவசுந்தரம் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் தேசிய வருமானத்திற்கு பங்களிப்பு செய்த தோட்டத்தொழிலாளர்கள் இன்று நாடோடிகளாக தொழில் தேடி அலைகிறார்கள்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுத்து இன்று ஒரு வருடத்தினை அடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இது வரை முழுமையான சம்பளத்தினை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன.
கூட்டு ஒப்பந்தம் ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலான நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதில் 20 கோரிக்கைகள் கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆனால் தோட்ட நிர்வாகங்கள் அதனையும் கைச்சாத்திட மறுத்துள்ளதோடு தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் வேதனத்தினை குறைத்து அடிப்படை உரிமைகளான சுகாதார வசதிகள் குறைத்துள்ளதோடு தோட்டத்தில் ஒருமாதம் வேலை செய்யாவிட்டாலும் கூட அவர்களை வேலையிலிருந்து நீக்குகிறது.
சம்பளத்தினையும் குறைத்து மதிப்பிடுகிறார்கள், முறைசாரா முறையிலே சகல வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையிலேயே செய்து வருகிறார்கள் இதனால் இவர்களின் சேவைகால நிதி சேமலாப நிதியம்.வீட்டு வசதி மலசல கூட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதாக தெரியவில்லை.
இரண்டு மூன்று ஆண்டுகள் தோட்டத்தில் வேலை செய்தால் கூட அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களாக பேர் பதிவதில்லை. புதிய தொழிலாளர்களை சேர்த்து கொள்வதுமில்லை.
இதனால் தொன்று தொற்று இந்த நாட்டுக்கு பாரிய அளவில் தேசிய வருமானத்திற்கு அந்நியச்செலவாணியினை தேடி தந்த தொழிலாளர்கள் தொழில்களை தேடி நாடோடிகளான அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் உபதலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்தார்.
இன்று தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரங்களையும் நோக்கி வேலைக்காக செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகமான மாணவர்கள் பாடசாலையினை விட்டு விலகி வேலைக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளன.பெண்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே இதனை இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் கண்டிப்பதுடன் அரசாங்கம் மற்றும் தொழில் அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும். என கேட்டுக்கொள்வதோடு கம்பனிகளுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கொடி சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இதே நேரம் நாங்கள் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்காக பல தொழிற்சங்கங்களுடன் பேசினாலும் கூட அவர்கள் பெரும் பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாக இருப்பதனால் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எனவே தான் நாங்கள் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு சகல வழிகளிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதுடன் சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் உபதலைவர் செல்லையா சிவசுந்தரம், விஸ்வாசம் ராஜலக்சுமி, இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் உதவிச்செயலாளர் சமிந்த பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.



