வறுமையை கடப்பதற்கு 200 வருடங்கள் போதவில்லை
"சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க" இது உலகில் யாருக்கு பொருந்துமோ இல்லையோ மலையக மக்களுக்கு அதிகமாகவே பொருந்தும்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் கடந்த போதிலும் ''200'' என்று பெருமை பாடும் அரசியல் கூட்டம் மலையக மக்களுக்கு எதை செய்தது என்றால் விடையாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
காலங்கள் ஓடினாலும் லயன் அறைகளும், ஓட்டை கூரைகளும், கொட்டில்களும், தாய்மாரின் கைகளில் ஒட்டிய தளும்பின் காட்சிகளும் இன்றுவரை மாறவில்லை.
தேயிலையை நம்பி நாடுகடந்து வந்த மக்கள், அந்த தேயிலைக்குள்ளேயே சிக்கி சீரழியும் நிலை 200 ஆண்டுகளாக தொடர்கிறது. தேயிலை காட்டில் காலை முதல் தன் கால் கடுக்க நடந்து திரிந்து உழைத்தாலும், உரத்து கூறும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கையும் இல்லை.
இருபது கிலோ கிராம் கொழுந்து பறித்தால் மாத்திரமே ஆயிரம் ரூபா சம்பளம் என நகரும் இவர்கள் வாழ்க்கையில், துன்பங்கள் என்னவோ துடைக்கப்படாத கண்ணீராய் தொடர்கிறது.
மலையக பெண்கள்
குடும்ப சுமையை ஏற்க ஆசைகளையும், அன்பையும் ஒருபுறம் தள்ளி வருமானத்தை பெருக்கிக்கொள்ள பல மலையக பெண்கள் வீட்டு பணிப்பெண் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக அவர்கள் செல்வது அரபு நாடுகளுக்கே. அந்நாடுகளில் வேலை கிடைப்பதென்னவோ அதிகமாக இருந்தாலும் அவர்கள் படும் துன்பங்களும் துயர்களும் எண்ணிலடங்காதவையே.
குடும்பச் செலவுகளை சமாளிக்கவும், பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் தன்னை வருத்திக்கொண்டாவது குடும்பத்திற்கு பணம் அனுப்பி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அதிகமான தாய்மார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினை நோக்கிச் செல்ல காரணமாகியது.
எனினும், வெளிநாட்டு வேலை முடிந்து வந்தவுடன் அவை கொடுக்கும் ஆடம்பர வாழ்வும் அதனால் ஏற்படும் தாக்கங்களும் பழைமையை மறந்த புதுமையை அவர்களுக்கு அளிப்பதோடு அவை தரும் தாக்கங்களை மலையக மக்கள் புரிந்து கொள்வதில்லை.
பெற்ற குழந்தையை தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் விட்டு செல்கின்றனர். வெளிநாட்டில் இருந்து உழைத்து அனுப்பும் பணம் எல்லாம் கட்டிய கணவன் அருந்தும் மதுவுக்கே செலவாகிறது.
இதனால் தன் பேரன், பேதிக்களை வளர்க்கும் முழுப்பொறுப்பும் மலையகத்தை பொறுத்தவரை அனேகமாக தாத்தா பாட்டியின் தலையில் விழுகிறது. அவை இன்று வரை தொடர்கிறது .
வெளிநாட்டு வேலை
சமத்துவம் பற்றி பேசுகின்ற நாம் ஒருவரை மாத்திரம் பெருமையாக சொல்ல முடியாது. தன் குடும்பத்தின் எதிர்கால விளக்கினை ஏற்ற மெழுகாய் உருகி வெளிநாட்டில் வேலை செய்கின்ற ஆண்களும் உண்டு.
குடும்ப சுமைகளை நீக்கி நாமும் முன்னேறுவோம் என்ற எண்ணத்தோடு போராடும் இம் மக்களுக்கு, முன்னேற்றம் என்பது இமயமாக தெரிகிறது, தெரிய வைக்கப்படுகிறது.
ஓட்டுக்காக காடு கடக்கும் அந்த சில சீமான் கூட்டமெல்லாம், சீட்டு கிடைத்ததும் போட்டு உடைத்துவிடுகின்றனர் இவர்களின் கோரிக்கைகளை.
சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மலையகத்தின் வளம் மலையகத்தில் பறந்து வியாபித்து கிடக்கிறது. ஆனால் அவை என்னவோ மலையகத்தவருக்கு சொந்தமில்லை.
இது இவ்வாறிருக்க இன்று அதிகளவிலான மதுபானசாலைகள் இருக்கும் இடமாக மலையகம் மாறிவிட்டது.
முன்பு கூறியது போல, அட்டை கடியிலும், கொட்டும் மழையிலும் உதிரம் சிந்தி உழைக்கும் பணத்தை மதுசாலைகளுக்கு தானம் வழங்கும் வள்ளல்கள் பறந்து கிடக்கின்றனர் எம் மலையகத்தில்.
பட்டினி கிடைக்கும் பிள்ளையும், வறுமை தாங்கும் குடும்பமும் அந்த மதுவுக்கு முன்னாள் மறைந்து விடுகின்றன. மலையக கல்வியை பொறுத்தமட்டில் கடந்தகாலங்களை விட மலையகம் முன்னேற்றம் கண்டுவிட்டது என கூறலாம். பல்கலை தெரிவு வீதமும் அதிகரித்துள்ளது எனவும் கூறலாம்.
இருப்பினும் அவை விரல் விட்டு என்னும் அளவுக்கு மாத்திரமே. இதற்கு காரணம், திறமை இருந்தும் கிடைக்காத வாய்ப்பும் வழிகாட்டலும்.
ஏற்றுமதி பயிரான தேயிலை
உயர்தரத்தில் சிறப்பு பெறுபேறு, சாதாரணதரத்தில் சிறப்பு பெறுபேறு மாவட்ட புள்ளிபட்டியலில் சிறந்த பெறுபேறு என திறமையை மலையக மாணவர்கள் வெளிப்படுத்தினாலும் அவை இறுதியாக வந்து முடியும் இடம் என்னவோ தலைநகரில் உள்ள புடவை கடைகளுக்கும், புதிய கடைகளுக்கும்.
இவை எல்லாம் வறுமை என்ற பிடியால் மறைக்கப்படுகிறது மறுக்கப்படுகிறது. குடும்ப சுமைக்காக கல்வியை ஓரம் கட்டி எத்தனையோ, மாணவர்கள் இன்றும் கொழும்பிலும் பல நகரங்களிலும் தொழில் செய்கின்றனர்.
இந்நிலையில் ஆர்வத்தோடு கல்வி கற்க பாடசாலை சென்றாலும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையினாலும், மாணவர்களுக்கு போதுமான வசதி இன்மையாலும் இன்றைய கல்வியும் மலையக மாணவர்களுக்கு ஒரு எட்டா கனியாகவே காணப்படுகிறது.
பாடசாலைகளை பொறுத்தவரையில் மலையக மாணவர்களின் அதியுயர் தெரிவாக இருப்பது உயர்தரப்பிரிவில் கலைத்துறையே. திறமை இருந்தும் கூட ஏனைய துறைக்கான போதிய வளம் இன்மையாலும், படிப்பிற்கு நகர் புறங்களுக்கு பல கிலோமீற்றர் தூரம் கடந்து செல்ல வேண்டும் என்பதாலும் தன் கனவுகளை மாற்றிக் கொண்டவர்கள் இங்கு பலருண்டு.
இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக தேயிலை காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
கோவிட்டிற்கு பின்னரான காலத்தில் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி கண்ட நிலையில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி பயிராக தேயிலை காணப்படுகிறது.
இதில் முக்கியமாக என் காதுக்கு எட்டிய உரையென்றால் ''இலங்கை தேயிலைக்கு உலகத்துல டிமாண்ட் இருக்கு''. இந்த விடயம் நான் கூறுவதோ எம் மக்கள் கூறுவதோ அல்ல. 225 தலைவர்கள் பேசும் நாடாளுமன்றத்தில் அடிக்கடி கூறப்படுவது.
இவையெல்லாம் இலங்கை பொருளாதாரத்தை பெருமைப்படுத்தி பேசப்படுவதால் என்னவோ இலங்கையில் மலையக மக்களுக்கு 200 வருடமாக டிமாண்டும் இல்லை, வறுமையை போக்குவதற்கான நடவடிக்கையும் இல்லை.
மீளக் கண்டுபிடிக்கப்பட்ட அடிமை முறை
2017ஆம் ஆண்டில், இலங்கை தேயிலைத் தொழிற்துறையின் 150ஆவது வருடப் பூர்த்தியினைக் கொண்டாடியது. இதற்கமைய பொருளாதாரத்தில் தேயிலைத் தொழிற்துறையின் வகிபாத்திரத்தினைக் கோடிட்டுக்காட்டுவதற்கும், துறையின் உற்பத்தியினை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றியும், துறையினை எவ்வாறு நவீனமயப்படுத்துவது என்பது பற்றியும் அரசாங்கமும் தோட்ட உரிமையாளர்களும் பல கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் மட்டுமே, உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாலைக் களிப்பினை வழங்கும் இரண்டு இலைகளையும் ஒரு கொழுந்தினையும் உற்பத்திசெய்பவர்கள் பற்றிய ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.
தோட்ட உரிமையாளர்களினதும் தொழிலாளர்களினதும் மாறுபடும் வாழ்க்கைகள் கட்டாயம் கோடிட்டுக்காட்டப்பட வேண்டும் என்பது அந்த கருத்தரங்கின் முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது. இதை மையப்படுத்திய விடயமாக கீழேயுள்ள இரண்டு மேற்கோள்கள் உற்பத்தியாளருக்கும் உழைக்கும் மக்களுக்கும் மாறுபாட்டினை விபரிக்கின்றன.
பிரித்தானியர்கள் எவ்வாறு அடிமைமுறையினை மீளக் கண்டுபிடித்தனர் என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தொகுப்பினை பிபிசி 2005ஆம் ஆண்டு ஒலிபரப்பியது. அதில் தோட்ட உரிமையாளரின் வாழ்வினை குறித்த ஆவணத்தொகுப்பு பின்வருமாறு சித்தரிக்கின்றது.
“நீங்கள் உங்கள் வராந்தாவில் அமர்ந்திருக்க, வேலைக்காரன் விசிறி வீச, லெமனெடைப் பருகிக் கொண்டிருக்க, உங்கள் கால் நகங்களை யாரோ ஒரு கூலி நறுக்கிக்கொண்டிருக்க, நீங்கள் தொழிலாளர்கள் வேலை செய்வதைப் பார்க்கலாம். நீங்கள் விரும்பிய எந்தப் பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம், காலையில் எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும் வரை ஏறக்குறைய அனைத்துமே உங்களுக்காகச் செய்யப்படுகின்றன. மக்கள் உங்களைக் கவனித்துக்கொண்டனர், மக்கள் உங்களுக்கு அடிபணிந்தனர், மக்கள் உங்களுக்குப் பயப்படுகின்றனர், தோட்ட உரிமையாளர் என்ற ரீதியில் உங்களின் ஒற்றை வார்த்தை வாழ்வையே மறுக்கலாம்.” இதுவே மலையை மக்களுக்கு பிரித்தானியர்களால் குத்தப்பட்ட முத்திரை என அந்த ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அந்த ஆவணப்படத்தில் சொன்னதையே இன்னமும் எமது நாட்டு முதலாளி வர்க்கத்தினர் தொடர்கின்றனர் என்பதே நிதர்சனம். மலையகத் தமிழ் மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மிக முக்கியமான அம்சம் அவர்களின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள கணிசமான வீழ்ச்சியாகும்.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்
1948 இல் சுதந்திரம் கிடைத்தபோது, அவர்கள் இலங்கைத் தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்தனர்.
கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையில் 1964ஆம் ஆண்டும் 1974ஆம் ஆண்டும் கைச்சாத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின் காரணமாகப் பெரும் எண்ணிக்கையில் இந்தியப் பிரஜைகள் என்ற ரீதியில் இம்மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்ட காரணத்தினால், இவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது.
இன்று, தொகைமதிப்புப் புள்ளிவிபரத்தின் படி, இவர்கள் சனத்தொகையில் வெறும் 5.5% ஆகவே இருக்கின்றனர்.
சுதந்திரத்தின் பின்னரான முதல் சில தசாப்தங்களில் இந்தியத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினை நாடற்றநிலை எனும் பிரச்சினையாகும்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் என நடத்தப்பட்ட சாதுர்யமிக்க கலப்புப் போராட்டங்களுடன், மூத்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையின் கீழ் இந்த சமுதாயம் பிடிவாதமிக்க சிங்கள ஆதிக்க அரசாங்கத்திடம் இருந்து பிரஜாவுரிமைக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
1964 அக்டோபர் மாதத்தின் பின்னர் இலங்கையில் பிறந்த அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. இது சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கென எஞ்சியிருந்தவர்களையும் உள்ளடக்கியது.
மேலும், 1978ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார முறைமையினால் இச்சமுதாயம் அதிக பிரதிநிதிகளைப் நாடாளுமன்றத்திற்கு அனுப்பக்கூடியதாக இருந்தது. எனினும் இப்போது இந்தச் சமுதாயம் சமத்துவத்திற்கும் கௌரவத்திற்காகவும் போராடி வருகின்றது.
பெரும்பான்மை வர்க்கத்தின் இனவாதம்
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை ஆட்சி செய்த அரசியல் கட்சிகளுக்கும், ஆளும் கட்சிகளுக்கும் பெரும்பான்மை சமூகதிற்கும் இனவாதம் என்பது மனதில் பதிந்த ஒரு விடயமாக காணப்படுகிறது. அந்த மன நோய் இன்று வரை தொடர்கிறது.
வடக்கு கிழக்கில் எமது சகோதர சகோதரிகள் நாடற்று, வீடற்று, உயிரற்று, ஊனமுற்று வாழும் இந்த போராட்ட வாழ்க்கைக்கு பெரும்பான்மை வர்க்கத்தின் இனவாதம் என்ற மனநிலையே காரணம்.
ஆனால் என்னவோ நம் நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் இதனை மூடி மறைக்க முழுப்பழியையும் தமிழர்கள் மீதே சுமத்துகிறது.
இந்த இனவாத நகர்வுகளுக்கு மலையக தமிழர்களும் விதிவிலக்கல்ல. காலங்களும் ஆண்டுகளும் 200ஐ தொட்டுவிட்டன.
ஆனாலும் மலையக மக்களில் பெரும்பாலானோரின் வாழ்வியல் விடுபடாத லயன் அறைகளுக்குள்ளேயும், ஒளி வராத வாழ்வுக்குள்ளேயும் அடங்கி விடுகின்றன.
மலையகம் 200 என ஊர் கடந்து நாடு கடந்து உலகம் வரை அந்த வார்த்தை சென்று விட்டது. இந்நிலையில் இந்த 200 ஆண்டு பயணத்தின் முடிவென்பது மலையக மக்களின் விடிவின் ஆரம்பமாகட்டும்...





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
