பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 60,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம்! தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை
பிரித்தானியாவில் குளிர்காலத்தில் 60,000 பேர் வரை (Flu) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜொனாதன் வான்-டாம் (Jonathan Van-Tom) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் காய்ச்சல் (Flu) நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜொனாதன் வான்-டாம் (Jonathan Van-Tam), இந்த ஆண்டு மக்களிடையே இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியானது மிக குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மக்களுக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி கிடைக்காமையே இதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், இந்த குளிர்காலத்தில் 60,000 பேர் வரை காய்ச்சலால் உயிரிழக்க நேரிடும் என்று பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை முறியடிப்பதற்காக, பிரித்தானியாவில் NHS-ன் வரலாற்றில் மிக பெரிய காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதில் 35 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இலவச தடுப்பூசிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல், கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை சுமார் 1.7 மில்லியன் மக்களுக்கு இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், சுமார் 28 மில்லியன் மக்கள் பூஸ்டர் டோஸ் பெற தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் காய்ச்சல் மற்றும் கோவிட் தடுப்பூசி இரண்டையும் பெறுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவின் (JCVI) வழிகாட்டுதலின் படி, எந்தவொரு கோவிட் வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்குப் பிறகு 6 மாதங்களுக்கு முன்னதாக கோவிட் பூஸ்டர் வழங்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.